உலக தாய்மொழி நாள்
2008-02-21 by விருபா - Viruba |
0
கருத்துகள்
இன்று (2008.02.21) உலகம் முழுவதும் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.
தினமணியில் இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் உலக தாய் மொழி நாள் தொடர்பில் நிகழ்ச்சிகள் எதுவும் காணப்படவில்லை.
உலக தாய் மொழி நாள் தொடர்பில் ஆழி பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி, சென்னை, சூளைமேட்டில் உள்ள 117, நெல்சன் மாணிக்கம் சாலையில் மாலை 5:30 மணி அளவில் நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது.
தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், செய்தித்துறையினர் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.
காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
2008-02-02 by விருபா - Viruba |
0
கருத்துகள்
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான "காந்திஜியின் இறுதி 200 நாட்கள்" என்ற நூலின் அறிமுக விழா, காந்திஜியின் அறுபதாவது நினைவு நாளான 2008.01.30 அன்று மாலை சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திரு. ஞாலன் சுப்பிரமணியம் முன்னிலை வகிக்க, திரு.ஆர்.முத்துசுந்தரம் தலைமையேற்க திரு.ஆர். ரவிராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நூலை அறிமுகம் செய்த பேரா. அ.மார்க்ஸ் தமது உரையில் "எங்களைப் போன்றவர்களின் காந்தியைப் பற்றிய வாசிப்பு என்பது காந்திஜியின் மரணத்திற்குப் பின் தான் துவங்குகிறது. இந்து மதத்தின் உயர்வுகளைப் பேசிக்கொண்டிருந்த காந்தி, இந்துமத அடிப்படைவாதிகளாலேயே கொல்லப்பட்டார். இது ஏன்? என்ற கேள்விக்குறியோடுதான் நாம் காந்தியை அணுகினோம். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தை மிக மோசமாக விமர்சித்து இருந்தாலும், அவர்கள் இந்து மத அடிப்படைவாதிகளால் கொல்லப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தால் ஒடுக்ப்பட்ட மக்களிடையே, அவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்டனர், காந்தியோ மக்களை ஒடுக்கியவர்களிடம் பேசினார்.
மேலும் தெய்வத்தின் குரல் எழுதிய சங்கராச்சாரியார் காந்திக்கு எதிராக சிறு பிரசுரம் எழுதி வெளியிட்டுள்ளார். காந்திக்கு 'இந்து மதத்தில் தீண்டாமை இல்லை, அது பிற்காலத்தில் வந்தது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது, இந்து மதத்தில் அதிக சுதந்திரம் இருக்கிறது என்று நம்பினார்."
அடுத்து நூலை அறிமுகம் செய்த டெல்லி IIT யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.சுவாமிநாதன் தமது உரையில் "இந்த கட்டுரை நான் டெல்லியில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்து பத்திரிகையில் வெளியானது. அங்கு இந்து சில இடங்களில்தான் கிடைக்கும், எழுத்தாளர் ப்ரேம்சந்தின் பேரனும் நானும் தொடர்ந்து படித்து விவாதம் செய்வோம். கட்டுரையின் கனத்தை வைத்து இக்கட்டுரைக்காக இதன் ஆசிரியர் இராமமூர்த்தி அதிக அளவில் ஆய்வுகளை, தேடல்களை செய்துள்ளமை உணரக்கூடியதாக இருந்தது. இந்த காந்திஜியின் இறுதி 200 நாட்கள் என்பது காந்தியின் வாழ்வில் முக்கியமானதோ இல்லையோ தெரியாது ஆனால் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. மிக முக்கியமான ஆவணம்" என்றார். இந்துவில் வெளியான இக்கட்டுரைகளை ஒவ்வொன்றாக வெட்டி ஒட்டி வைத்திருந்த ஒரு தொகுப்பை காண்பித்தார்.
இந்து பத்திரிகையில் காந்திஜியின் இறுதி 200 நாட்கள் தொடர் கட்டுரையை எழுதிய வி.ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற இந்திய அரசு ஆட்சிப் பணியாளர் (I.A.S), வானொலியில் cricket போட்டிகளை வர்ணணை செய்தவர். கராச்சியில் பிறந்த இவர், பிரிவினையின் போது தனது பன்னிரண்டாவது வயதில் எல்லாவற்றையும் இழந்துவிட்டு இங்கு வந்தவர். அவர் தனது சிறப்புரையில் "காந்தியின் தேவை இன்றைக்கும் இருக்கிறது. காந்திஜியின் வாழ்க்கை முழுவதும் பல வித சோதனைகளும், சுவாரஸ்யங்களும், குறும்புகளும், ராஜ தந்திரங்களும் நிரம்பியவை, அவருடைய வாழ்க்கை மிகவும் துல்லியமாக ஆவணமாக்கப்பட்டுள்ள ஒன்று. இன்றைக்கும் உலகம் முழுமைக்கும் காந்திஜியின் தேவை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நூல் நல்ல மொழிபெயர்புடன், நல்ல தயாரிப்புடன் வெளிவந்திருக்கிறது" என்றர்.
வரவேற்புரை வழங்கிய ரவிராஜன் பாரதி புத்தகாலயத்தின் பதிப்புச் சேவையை விதந்து பாராட்டினார். தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகின்ற இக்காலத்தில் தேசபிதா பற்றிய ஒரு தக்க ஆவணத்தை தமிழில், அதுவும் 900 பங்களில் தருவது என்பது மிகப் பெரிய பணி என்பதை குறிப்பிட்டார்.
1997,1998 காலப்பகுதியில் இந்து நாளிதழில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். 1947 ஜூலை 15 முதல் 1948 ஜனவரி 30ம் நாள் வரையிலான 200 நாட்கள் தேசபிதா காந்திஜி மத நல்லிணக்கத்திற்காக போராடிய நாட்களாகும். இந்து முஸ்லிம் மத வெறியர்களுக்கு எதிராக தன் உயிரைப் பணயம் வைத்த நாட்கள் இவை. எந்த அளவிற்குத் துயரமும் வலியும் நிரம்பியவையாக காந்திஜியின் இந்த 200 நாட்களும் இருந்தன என்ற விரிவாகவும் தெளிவாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல்.
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
தமிழாக்கம் : கி.இலக்குவன்
விலை : ரூ 350.00
பக்கம் : 900
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)